வல்லரசுகளும் தலை வணங்கித்தான் தீர வேண்டும்.. ஸ்டெர்லைட் தீர்ப்பு கமல்ஹாசன் பெருமிதம் ..

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வல்லரசுகளும் தலை வணங்கித்தான் தீர வேண்டும்.. என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால், வல்லரசுகளும் தலை வணங்கித்தான் தீர வேண்டுமென நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது.

ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்கு முறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது. போராட்டக்களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள். இந்த தீர்ப்பு கொண்டாடக்கூடிய ஒன்று என்றாலும், இன்னும் அந்தப் போர் முடிந்து விடவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, தன் பயங்கரவாத செயலுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இன்று கிடைத்த நீதியைத் தக்க வைக்க நாம் சோர்வின்றி தொடர்ந்து போராட வேண்டும். மக்களுக்கான நீதி இன்று உறுதியாகி இருக்கின்றது. ஸ்டெர்லைட், மக்களின் நில, நீர் வளத்தையும், கனிம வளத்தையும் அபகரிக்கும் செயலுக்கு மக்கள் நீதி மய்யம் தனது வலுவான எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கும். களத்தில் நானும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தொடர்ந்து இருப்போம்.இவ்வாறு கமல்ஹாசன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

More News >>