இந்து தலைவர்கள் மட்டுமே குறி.. லிஸ்ட்டில் மோடி!- `ரா கொடுத்த முக்கிய அலர்ட்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பாகிஸ்தான் அரசு மட்டுமல்ல, பாகிஸ்தானின் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பும் இந்தியாவுக்குப் பகிரங்க மிரட்டல் விடுத்து வருகிறது. இதற்கிடையே, தான் இந்திய உளவு அமைப்பான `ரா' மத்திய ,மாநில அரசுகளுக்கு முக்கிய அலர்ட் ஒன்றைக் கொடுத்துள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி ராமர் கோயில், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், பாஜக உள்ளிட இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொலை செய்ய ஜெய்ஷ் இ முகமது அமைப்பு சதித் திட்டம் தீட்டி, அதற்காகத் தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவ விட்டிருக்கிறது என்பதே அந்த அலர்ட்.
மேலும், பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, ஏபிவிபி ஆகிய அமைப்புகளின் தலைவர்களே இவர்களின் டார்க்கெட்டாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த லிஸ்ட்டில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கிறது என்று ஷாக் கொடுத்திருக்கிறது `ரா'. `ரா'-வின் இந்த எச்சரிக்கையை அடுத்து நாடு முழுவதும் உள்ள இந்து தலைவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது மத்திய அரசு. அதேபோல், விமான நிலையங்கள், விமானப் படைகள் மீதான பாதுகாப்பைப் பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.