கோழிக்கோடு விமான விபத்து படமாகிறது
கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து சினிமாவாகிறது.கடந்த 7ஆம் தேதி இரவில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. பலத்த மழையைத் தொடர்ந்து தரை இறங்கும்போது ஏற்பட்ட பிரச்சனையால் இந்த விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் சுற்றுச் சுவரை இடித்து 35 அடி பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த அந்த விமானம் இரண்டாகப் பிளந்தது.
இதில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 165க்கும் மேற்பட்ட மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 90க்கும் மேற்பட்டோர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்காததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. கேரளாவில் நடந்த இந்த மிகப்பெரிய விமான விபத்து தற்போது மலையாள சினிமாவாகிறது. இந்த படத்திற்கு 'காலிக்கட் எக்ஸ்பிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மஜீத் மஞ்சேரி திரைக்கதையும், வசனம் எழுதும் இந்த படத்தை மாயா என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் செய்கிறார். அதி நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த படம் தயாராகிறது. இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களுடன் மலையாளத்தின் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.