பெண் இயக்குனர் படத்தில் மம்மூட்டி
மலையாள சினிமாவில் 'மெகா ஸ்டார்' என அழைக்கப்படும் மம்மூட்டி எப்போதுமே புதுமுக இயக்குனர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பார். இவரது தயவால் மலையாள சினிமாவில் முன்னுக்கு வந்த புதுமுக இயக்குனர்கள் ஏராளம் உள்ளனர். இந்நிலையில் மம்மூட்டி முதன் முதலாக ஒரு புதுமுக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். ரதீனா சர்ஷாத் என்ற புதுமுக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க மம்மூட்டி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஹர்ஷாத், ஷரபு, சுஹாஸ் ஆகிய 3 பேர் திரைக்கதை எழுதியுள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இந்த படத்தில் டொவினோ தாமஸ், பார்வதி, ஆசிப் அலி உள்பட மலையாளத்தின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த தகவலை இயக்குனர் ரதீனா சர்ஷாத் தனது பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். 'எனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளேன். ஒரு இயக்குனர் என்ற நிலையில் என்னுடைய முதல் சினிமா விரைவில் தொடங்க உள்ள சந்தோஷத்தில் இருக்கிறேன். மம்மூக்காவுக்கு நன்றி....' இவ்வாறு அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.