ஒரே நேரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு கொரோனா! -கரூர் `ஷாக்
கொரோனா தொற்றால் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்த பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திரை பிரபலங்களான கருணாஸ், எஸ்.பி பாலசுப்பிரமணியன் எனப் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதில் கருணாஸ் குணமடைந்து விட, எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு உயிர் காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதேபோல் அரசியல்வாதிகளும் கொரோனாவுக்கு தப்பவில்லை. ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார். அதேநேரம் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு என 30க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இவர்களுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. மேலும், விஜயபாஸ்கர் மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, மூவரும் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், அவரின் அரசியல் எதிரியும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கரூர் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.