15 நாளாக எரியும் காட்டுத் தீ! - பயிற்சிக்கு அனுமதி அளித்தது எப்படி?
போடி வனப்பகுதியில் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கும் மேல் காட்டுத் தீ ஏற்பட்டு வரும் நிலையில், மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள வனத்துறையினர் அனுமதி அளித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
போடி அருகே குரங்கணி - டாப் ஸ்டேசன் ஆகிய பகுதிகளுக்கு இடையே 14 கி.மீ.,தூரம் சுற்றுலா பயணிகள் மலையேற்ற பயிற்சி வழங்க வனத் துறை அனுமதி வழங்கி வருகிறது. இதற்கென, மலையேற்றப் பயிற்சிக்கு செல்வோர் நபர் ஒன்றுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.
மலையேற்ற பயிற்சி மேற்கொள்பவர்களுடன் வனத் துறை மூலம் வேட்டைத் தடுப்பு ஊழியர்கள் அல்லது வனத் துறை ஊழியர்கள் வழிகாட்டியாக அனுப்பி வைக்கப்படுவர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மலையேற்ற பயிற்சிக்கென நிர்ணயித்துள்ள குரங்கணி-டாப் ஸ்டேசன் வழித் தடத்தை விடுத்து, குரங்கணியில் இருந்து நடை பாதை, தீ தடுப்பு பாதை, வன விலங்குகள் தடுப்பு அகழி வசதி இல்லாத வனப் பகுதிக்குள் பணத்தைப் பெற்றுக்கொண்டு உரிய ரசீது கொடுக்காமல் அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக வனத்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
மேலும், போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேல் வனப் பகுதிக்குள் எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், வனப் பகுதிக்குள் மலையேற்ற பயிற்சி மேற்கொள்வோரை தடுக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படித்தீர்களா? : காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன் - வைரமுத்து உருக்கம்
தேனி காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறும் மாணவர்கள் திங்களன்று அதிகாலையில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் பணியில் துரிதமாக ஈடுபட்டு காயம்பட்டவர்களையும், இறந்தவர்களையும் லகுவாக மீட்டனர். அவர்களை முதல்நாளே ஈடுபடுத்தியிருந்தால் உயிர் சேதம் குறைந்திருக்கும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் அகப்பட்ட நிவேதா என்ற பெண்மணி 108 ஆம்புலன்ஸ்க்கு போனில் தெரிவித்த போதே, ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் எனக் கதறியுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அவருடன் பேசியுள்ளார். அப்போதே ஏற்பாடு செய்திருந்தால் பெரும் உயிர் சேதத்தை தவிர்த்திருக்கலாம்.
மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர் ஞாயிறு இரவு ஒருமணி நேரம் வட்டமடித்து சென்றது. ஆனால், துணை முதல்வரால், தன் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்யப்பட்ட ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிற்கு காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டதால் அவர்களை உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட வைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com