அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் அறிவிப்பு..
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஏகோபித்த ஆதரவுடன் அவர் வேட்பாளராகி இருக்கிறார்.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கே உட்கட்சித் தேர்தல் நடைபெறும். அதில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுபவரே வேட்பாளராக நிற்க முடியும். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிட்டு, கடந்த ஜூன் மாதம் வரை நடந்த வாக்குப்பதிவுகளில் 3900 வாக்குகளைப் பெற்று விட்டார். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று விட்டதால் அவரே வேட்பாளர் என்பது உறுதியானது.ஆனாலும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில்தான் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். தற்போது அமெரிக்காவில் கொரோனா பரவியுள்ளதால், 50 மாகாணங்கள், 7 யூனியன் பிரதேசங்களிலும் ஆன்லைன் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, இன்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜோ பிடன் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது அவர், இந்த உலகம் எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஆதரவாக உள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். எனது ஆழ்மனதிலிருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று கடந்த வாரம் ஜோ பிடன் அறிவித்தார். கமலாவின் தாய், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.