நடிகர் சஞ்சய் தத் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. துபாயிலிருந்து தனி விமானத்தில் மனைவி பறந்து வந்தார்..
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 9ம் தேதி மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிந்தது. பிறகு மூச்சுத் திணறலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது செய்யப்பட்ட மற்றொரு சோதனையில் சஞ்சய் தத்துக்கு நுரையீரலில் புற்று நோய் 3வது கட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மூச்சுத் திணறல் குணமாகி வீடு திரும்பிய சஞ்சய் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று மும்பையில் உள்ள கோகிலா பென் புற்று நோய் சிகிச்சை மையத்தில் சேர்ந்தார். முன்னதாக அவர் வீட்டிலிருந்து மருத்துவமனை புறப்படுவதற்கு முன் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று மெசேஜ் பகிர்ந்தார்.முன்னதாக துபாயில் கொரோனா ஊரடங்கால் சிக்கி இருந்த சஞ்சய்தத் மனைவி மான்யதா தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டு வந்தார். அவர் கணவருடன் மருத்துவமனைக்குச் சென்று அவரை அங்கு அனுமதித்து உடனிருந்து கவனிக்கிறார்.