சபரிமலையில் இவ்வருடமும் ஓணம் விருந்து உண்டு

கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே சபரிமலை ஐயப்பன் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல பூஜைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் பக்தர்கள் இதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மண்டலக் காலம் முதல் பக்தர்களை கடும் நிபந்தனைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக ஐப்பசி மாத பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

சபரிமலையில் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். சபரிமலை வரும் பக்தர்களுக்கு நான்கு நாட்கள் ஓண விருந்து அளிக்கப்படுவது வழக்கம். சபரிமலை கோயில் மேல்சாந்தி, தந்திரி, தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தனியார் சார்பில் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து அளிக்கப்படுவது உண்டு. ஆனால் இம்முறை ஓண பூஜைகளுக்குப் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை.

இவ்வருட ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைகளுக்காக வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படுகிறது. 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஓண சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இவ்வருடம் பக்தர்கள் சபரிமலைக்கு வராவிட்டாலும் வழக்கம்போல மேல்சாந்தி மற்றும் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பில் இரண்டு நாட்கள் ஓண விருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் பணியில் ஈடுபட்டுள்ள தேவசம்போர்டு ஊழியர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு இந்த விருந்து வழங்கப்படும். ஓண சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும்.

More News >>