இசை வடிவில் தேசிய கீதம்: கூகுளின் புதிய செயலி
செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) இயங்கும் இணையச் செயலியைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'சவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா' என்ற இந்த செயலியைப் பயன்படுத்தி தேசிய கீதத்தைப் பாடினால் அது இந்தியாவின் பாரம்பரிய இசைக் கருவிகளின் இசைவடிவமாக மாற்றப்படும்.கூகுளின் 'டென்ஸர்ஃப்ளோ' தளம் பயனரின் குரலை பன்சூரி, ஷெனாய் மற்றும் சராங்கி ஆகிய இசைக்கருவிகளின் இசைவடிவமாக மாற்றும். பல்வேறு பயனர்கள் இந்தச் செயலியின் வழியாய் பதிவு செய்யும் குரல்களைப் பயன்படுத்தி தேசிய கீத இசைவடிவம் தொகுக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோகே (karaoke) பாணியில் மொபைல் போனில் பயனர் பாடப்படும் பாடல், இசை வடிவில் மாற்றப்படும். இந்த செயலியைக் கூகுள், பிரசார் பாரதி மற்றும் வெர்சுவல் பாரத ஆகியவற்றுடன் இணைந்து வழங்குகிறது.கடந்த ஆண்டு பெங்களூருவில் இந்தியக் கூகுள் ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி மையம் இந்தியா எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்குச் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) அடிப்படையாகக் கொண்டு தீர்வு காண ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இதற்குக் கூகுள் 10 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சங்கர நேத்ராலயா ஆகியவற்றுடன் இணைந்து நீரிழிவு காரணமாக ஏற்படும் விழித்திரை (ரெட்டினோபதி) பரிசோதனையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.வெள்ளப்பெருக்கை முன்னறிவிக்கும் எச்சரிக்கை செய்தியை ஆயிரக்கணக்கான மக்களுக்கு அனுப்பக்கூடிய ஆராய்ச்சி, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொடர் மருத்துவ கண்காணிப்பு, எய்ட்ஸ் ஆபத்தைக் குறைத்தல் மற்றும் விலங்குகள் - மனிதர்கள் சந்திப்பின் ஆபத்தைக் குறைத்தல் போன்ற சமுதாய நல நோக்கிலான ஆராய்ச்சிகளையும் கூகுள் நிறுவனம் நடத்தி வருகிறது.