5 மாதத்துக்கு பிறகு திறந்த டாஸ்மாக்.. வசூலை வாரி குவித்த சென்னை `குடிமகன்கள்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் மாதம் முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக் டவுன் தற்போது 7ம் கட்டத்தில் இருக்கிறது. முதல் கட்ட லாக் டவுன் அறிவித்த போதே முன்னெச்சரிக்கையாகத் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதில் இடையில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும், குறிப்பாகச் சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் அங்கு மட்டும் திறக்கப்படாமல் இருந்தன.

இதனால் மதுபிரியர்கள் சோகத்தில் மூழ்கும் நிலைக்குப் போயினர். இதனிடையே தான், சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்து நேற்று முதல் நாளாக மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் விற்பனை அமோகமாக நடந்தது. டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடந்தது.இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை முழுவதிலும் இருக்கும் 720 டாஸ்மாக் கடைகளிலும் சேர்த்து 33.50 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

More News >>