சுற்றுலா விசாவில் வந்தவர்கள் ஆகஸ்ட் 31க்குள் திரும்பிச் செல்ல குவைத் அரசு உத்தரவு
கொரோனா ஊரடங்கு சட்டத்திற்கு முன்பாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து குவைத்துக்கு ஏராளமானோர் சுற்றுலா விசாவில் சென்றனர். அங்குச் சென்ற பின்னர் திடீரென ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதால் யாராலும் தங்களது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் குவைத் அரசு விசா காலாவதியை நீட்டித்துக் கொடுத்தது. இவ்வாறு பல மாதங்கள் அவர்களுக்கு விசா நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பெரும்பாலான நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கியதால் தங்களது நாட்டுக்குச் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அவரவர்களின் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.விசா காலாவதி முடிந்து தங்களது நாட்டில் சிக்கியுள்ளவர்களுக்கு இனி விசா நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்று குவைத் அரசு தீர்மானித்துள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு அங்குச் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் 31ம் தேதிக்குள் திரும்பிச் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் திரும்பி செல்லாவார்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
திரும்பிச் செல்லாதவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும், இவ்வாறு நாடு கடத்தப்படுபவர்கள் பின்னர் குவைத்துக்கு வர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலக்கெடுவை மீறி குவைத்தில் தங்கினால் கடும் அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோல குவைத்தில் பணி புரிந்த லட்சக்கணக்கான வெளிநாட்டினர் விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தனர். இவர்களும் ஊரடங்கு சட்டம் காரணமாக குவைத்துக்கு திரும்பி வர முடியாத நிலை உள்ளது. சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இதே போல பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு 'இக்காமா' என அழைக்கப்படும் தொழில் அனுமதி ஆன்லைனில் புதுப்பிக்க வசதி செய்யப்பட்டது. ஆனால் செப்டம்பர் மாதம் முதல் இக்காமாவை ஆன்லைனில் புதுப்பிக்கத் தேவையில்லை என்றும் குவைத் அரசு தீர்மானித்துள்ளது.