கொரோனாவால் கேரள சுற்றுலாத் துறைக்கு ₹25 ஆயிரம் கோடி இழப்பு
திருவனந்தபுரத்தில் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியது: கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் தனியார்த் துறைகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேரளாவுக்குச் சுற்றுலாத் துறை மூலம் அதிக அளவில் வருமானம் கிடைத்து வருகிறது. ஊரடங்கு சட்டம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு வரவில்லை. இதனால் வருமானம் அடியோடு குறைந்து விட்டது.
கோவளம், மூணாறு, ஆலப்புழா உட்பட வெளிநாட்டினர் அதிக அளவில் குவியும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. கடந்த 6 மாதத்தில் மட்டும் கேரள சுற்றுலாத் துறைக்கு ₹25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க ₹455 கோடி செலவில் ஒரு புதிய கடன் திட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளோம். இந்த திட்டத்தின் படி கடந்த சில மாதங்களாக வருமானம் இல்லாமல் வாடி வரும் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ₹25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வட்டியில் 50 சதவீதம் மானியம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.