இறப்பதற்கு முன்னரே ஆறுதல் காட்டிக்கொடுத்த சு.சுவாமி- சுஷாந்த் மரணத்தில் வளைக்கப்படும் பிரபலம்!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. வழக்கு சிபிஐயின் வசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி காரணம் என்றும், சுஷாந்த் கணக்கிலிருந்து 15 கோடி மோசடி நடந்துள்ளது என்று சுஷாந்த்தின் குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சுஷாந்த் இறப்பதற்கு முன்னரே ரியா சக்ரபோர்த்திக்கு ஒருவர் ஆறுதல் கூறிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்தப் பிரபலத்தின் பெயர் சுஹ்ரிதா தாஸ். சுஷாந்த் மரணத்தில் சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்பட்டு வரும் இயக்குநர் மகேஷ் பட்டின் நட்பு வட்டாரத்தின் மிக முக்கிய நபர் தான் இந்த பெண் சுஹ்ரிதா தாஸ். இவர் சுஷாந்த் இறந்த தகவல் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, அதாவது, ஜூன் 14, காலை 11.08 மணி அளவில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உருக்கமான பேஸ்புக் பதிவை இட்டுள்ளார். அதில், ``அன்பு ரியா, மற்றவர்கள் சுஷாந்துக்காக வருத்தப்படும்போது நான் உன்னுடன் உறுதியாக நிற்பேன்.
சுஷாந்தை ஒழுங்காக, நிலையாகக் கொண்டு செல்ல நீ எடுத்த முயற்சிகளைப் பார்வையாளனாகப் பார்த்தேன் என்கிற ரீதியிலும், இந்த நாட்டின் பிரஜை என்கிற ரீதியிலும், ஒரு விஷயத்தை அனைவருக்கும் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை எனக்கு இருக்கிறது. மன அழுத்தம் பெரும் அழிவைத் தரும் பிரச்சனை. அப்படிப்பட்ட மன அழுத்தத்துக்கு இதுவரை தீர்வு கிடைத்தது இல்லை. சுஷாந்துக்காக நீ ஒவ்வொரு முறையும் மகேஷ் பட்டிடம் ஆலோசனைக் கேட்பதையும், அவருக்காக நீ போராடியதையும் நான் பார்த்திருக்கிறேன்.
சுஷாந்த் வீட்டில் ஒரு நாள் நாம் சந்தித்ததை மறக்க முடியாது. அப்போதே ஆழ்மனதிலிருந்து சுஷாந்த் நம்மை விட்டு விலகிக் கொண்டிருந்தார். இதை மகேஷ் பட் பார்த்தார். அதனால் தான் 'விலகிச் சென்று விடு. இல்லையென்றால் அது தன்னோடு உன்னையும் இழுத்துக் கொண்டுவிடும்' என்று அவர் உன்னிடம் சொன்னார். சுஷாந்துக்காக, நீ எல்லாவற்றையும் கொடுத்தாய். உன்னால் ஆனதை விட அதிகமாகச் செய்திருக்கிறாய்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவைச் சிலர் ஸ்கீரின் ஷாட் எடுத்து பகிர்ந்ததை பார்த்த பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி, அதை ரீ டுவிட் செய்தார். இதனையடுத்து தான் இந்த சம்பவம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. தற்போது சுஷாந்த் இறக்கப் போகிறார் என்பது எப்படி சுஹ்ரிதா தாஸுக்கு முன்னரே தெரியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு குறித்து சர்ச்சை வெளியான நிலையில், சுஹ்ரிதா தாஸ் தனது பதிவை நீக்கியுள்ளார். எனினும் அவரின் பதிவு குறித்த ஸ்க்ரீன் ஷாட்டை அழிக்க முடியவில்லை. இது சுஷாந்த் மரணத்தில் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சுஹ்ரிதா தாஸை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.