பிரபல மலையாள நடிகர் ரிசபாவாவுக்கு எதிராக கைது வாரண்ட்
மலையாள சினிமாவில் 1990-ல் 'டாக்டர் பசுபதி' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரிசபாவா. இதன் பின்னர் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் வில்லனாக நடித்த 'ஹரிஹர் நகர்' என்ற படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்த படத்தில் ஜான் ஹோனாய் என்ற பெயரில் நடித்த இவரது வில்லன் கதாபாத்திரம் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஏராளமான மலையாள டிவி தொடர்களிலும் நடித்துள்ள இவர், பல நடிகர்களுக்கு டப்பிக்கும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இவர் கொச்சியைச் சேர்ந்த சாதிக் என்பவரிடம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ₹11 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் பல வருடங்களாக அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் சாதிக்கிடம் ரிசபாவா ₹11 லட்சத்திற்கான ஒரு காசோலை கொடுத்தார். ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் வங்கியிலிருந்து திரும்பி விட்டது. இதையடுத்து ரிசபாவாவுக்கு எதிராக சாதிக் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காகப் பல முறை சம்மன் அனுப்பியும் ரிசபாவா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்ட் 19ம் தேதி ரிசபாவா கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி இன்று நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நடிகர் ரிசபாவாவுக்கு எதிராக இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது உத்தரவிட்டுள்ளது.