இறைச்சிக்காக வீட்டு நாய்கள்.. மக்களின் பட்டினியை போக்க கிம் எடுத்த அதிரடி முடிவு!
வினோதமான கட்டளைகளுக்கு, செயல்களுக்குப் பெயர் பெற்றவர், சர்வாதிகாரி என அறியப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தான். அணு சக்தி, அமெரிக்கா உடனான போர் பல்வேறு சர்ச்சைகளுக்கு வடகொரியாவை இழுத்துச் சென்றவர் இவர்தான். இதனால் அந்நாடு பொருளாதாரத் தடையை எதிர்கொண்டுள்ளது. இதனிடையே, தற்போது இருக்கும் கொரோனா சூழல் அந்நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இதனால் வடகொரிய மக்கள் பட்டினியால் வாடுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது கிம் ஜாங்-உன்னின் உத்தரவும் அமைந்துள்ளது.
நாட்டு மக்களின் பசியைப் போக்க, அந்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை இறைச்சிக்காக ஒப்படைக்க வேண்டும் என்று கிம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நியூசிலாந்து ஹெரால்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு உணவுப்பொருள் வழங்க முடியாததை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்றும் அந்த செய்திக் குறிப்பு விவரிக்கிறது.
மேலும் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு வீட்டில் வளர்க்கப்படும் நாய்களைக் கணக்கெடுத்து, அதை அரசிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியாவில் நாய் இறைச்சி மிகவும் விரும்பி உண்ணக்கூடிய உணவு என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் கிம்மின் இந்த முடிவுக்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் ஏற்பட்டதற்குக் காரணம், இறைச்சிதான். சீன மக்கள் பல்வேறு வகையான இறைச்சியை உட்கொண்டதன் விளைவுதான் கொரோனா பரவியது என இப்போதும் கூறப்படுகிறது. அப்படி இருக்கின்ற நிலையில், கிம் எடுத்துள்ள இந்த முடிவு பேரழிவுக்கு வித்திடாமல் இருந்தால் சரி என்கிறார்கள்.