எல்லை ஆக்கிரமிப்பு.. இந்தியா, சீனா இடையே இன்று மீண்டும் பேச்சு..
இந்தியா, சீனா இடையே அதிகாரிகள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீனா ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.கடந்த ஜூன் மாதத்தில், காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன. இதனால், இந்திய-சீன எல்லையில் திடீரென பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், சீனா அந்த இடத்தில் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியது. இதையடுத்து, வர்த்தக ரீதியில் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்திய அரசு முடிவெடுத்தது. 55க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதன்பின்பும், சீன படைகள் இன்னும் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் இருந்து வருகின்றன. இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே சீனப் படைகள் தங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து விலகி, திரும்பிச் செல்வது குறித்து இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது சீனாவும் சுமுக உடன்பாடு காண விரும்புகிறது. இதன்படி, இந்தியா, சீனா இடையே வெளியுறவுத் துறை இணைச் செயலாளர்கள் மட்டத்தில் இன்று(ஆக.20) பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பிங்கர் பகுதி, டேப்சங் மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து சீன படைகள் திரும்பிச் செல்ல வேண்டுமென இந்த கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த உள்ளது.