ஹாங்காங்கிற்கு அமெரிக்க சலுகைகள் ரத்து.. டிரம்ப் பேட்டி..
ஹாங்காங் நகருக்கு அளித்து வந்த வர்த்தகச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவுக்கே அதிக வர்த்தகம் திரும்பி வரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டில் இருக்கும் போது தினமும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளிப்பார். நேற்று(ஆக.19) அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:ஹாங்காங் மக்கள் முழு சுதந்திரத்தையும் பெற வேண்டுமென்பதற்காகவே அமெரிக்கா இவ்வளவு காலமாக அதிகமான வர்த்தகச் சலுகைகளை அளித்து வந்தது. இதனால் தான், அந்நகர் பெரிய வர்த்தக மையமாகத் திகழ்ந்து வருகிறது.
ஆனால், இப்போது ஹாங்காங் சுதந்திரத்தைச் சீனா பறித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா அளித்து வந்த சலுகைகளை ரத்து செய்துள்ளது. சீனாவுடன் செய்து கொண்ட 3 வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுக்குப் பல தொழில்கள் திரும்பி வந்து விடும். நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச், நாஸ்டாக் உள்பட அமெரிக்க நிறுவனங்கள் திரும்பி வந்து விடும். இது அமெரிக்க வர்த்தகத்தைப் பெருக்கும்.இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
சீனா சமீபத்தில் ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பிரிவினைவாதம், தீவிரவாதம் பேசுபவர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை அளிக்கலாம். மிகக் கடுமையான இந்தச் சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர்.