கன்னடத்தில் நடிக்க கடும் முயற்சியில் பிரபல காமெடி நடிகர்..
கோலிவுட்டில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ளார் யோகி பாபு. தமிழில் நிற்க நேரமில்லாமல் ஷூட்டிங்கிற்கு ஓடிக்கொண்டிருந்தாலும் கேப் கிடைக்கும் போது பிற மொழிகளில் தலை காட்டத் தவறுவதில்லை. இந்தியில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் யோகி பாபு நடித்தார். அதேபோல் தெலுங்கு படம் ஒன்றிலும் அவர் நடித்தார். விரைவில் கன்னட திரையுலகில் அவர் அறிமுகமாவார் என்று தெரிகிறது. அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, புனித் ராஜ் குமாருடன் யோகிபாபு இருக்கும் புகைப்படம் நெட்டில் வெளியானது. தமிழில் ரஜினிகாந்த், அஜீத், விஜய் போன்றவர்களுடன் இணைந்த யோகி பாபு கன்னடத்திலும் அங்குள்ள சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க உள்ளாராம். கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படமான பஜாரங்கியின் தொடர்ச்சியான பஜாரங்கி 2 படத்தின் மூத்த நடிகர் சிவா ராஜ்குமாருடன் யோகிபாபு சந்திப்பு நடத்தியபோதே கன்னடத்தில் நடிப்பார் என்ற கிசுகிசுக்கள் எழுந்தன.
சிவா ராஜ்குமாருடன் அவர் போஸ் கொடுத்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமாருடன் யோகிபாபு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததுடன் அவருக்கு மாலை, சால்வை மற்றும் மைசூரு பெட்டா (தலைப்பாகை) அணிவித்து யோகிபாபு கவுரவித்தார். பின்னர் மற்றொரு கன்னட நட்சத்திரமான துனியா விஜயையும் யோகிபாபு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.