மான் இறைச்சி அல்ல.. கர்ப்பிணி காட்டெருமை இறைச்சி.. கேரளாவில் தொடரும் வன கொலைகள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசிப் பழத்தில் வெடிகுண்டு வைத்துக் கொடுக்கப்பட்டது. இதில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சோகம் மறைவதற்குள் தற்போது இன்னொரு வனக்கொலையும் அதே கேரளத்தில் நிகழ்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சக்கிக்குழி வன அதிகாரிகளுக்கு காட்டில் சிலர் விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவதாக ரகசிய தகவல் கிடைக்க, உடனடியாக வனத்தில் சோதனை நடத்தியுள்ளனர் அதிகாரிகள். அங்கு விலங்கை வேட்டையாடிய தடத்தையும், சுமார் 25 கிலோ மதிப்புள்ள வன விலங்கின் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய வன அதிகாரி சுரேஷ் என்பவர், ``எங்களுக்குத் தகவல் கிடைத்த இரவே, வனத்தில் சோதனையிட்டோம். அப்போது 25 கிலோ இறைச்சி மட்டும் வனத்தில் கிடைத்தது. வேட்டையில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டனர். முதலில் அந்த இறைச்சியை மான் இறைச்சி என்று தான் நினைத்தோம். ஆனால் குற்றவாளிகளைத் தேடி கைது செய்த பின்புதான் தெரிந்தது கைப்பற்றப்பட்டது மான் இறைச்சி இல்லை, காட்டெருமை இறைச்சி என்பது. அதிலும் வனத்தில் இறைச்சி எலும்புகளைச் சோதனை செய்ததில் கொல்லப்பட்டது, காட்டெருமை என்பதும், அதுவும் அந்த எருமை கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்தது. தற்போது இந்தக் கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ஆறு பேரைக் கைது செய்துள்ளோம்" என விவரித்துள்ளார்.

More News >>