`கேரள மக்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவு இது!.. மோடிக்கு கடிதம் எழுதி பொங்கிய பினராயி

தனியார் ஒத்துழைப்புடன் விமான நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை நேற்று கூடி ஒப்புதல் அளித்தது. இதேபோல் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் கௌஹாத்தி விமான நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பும் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கியுள்ளது.

முதலாவதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் இத்திட்டத்தை எதிர்த்து காட்டமாகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ``மாநில அரசோடு ஆலோசனை செய்யாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது கடினம். இது ஒட்டுமொத்த கேரள மக்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவு. இதனால், இந்த விவகாரத்தில் நீங்கள், நேரடியாகத் தலையிட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

திருவனந்தபுரம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விமான நிலையத்தின் வளர்ச்சிப் பணிக்காகக் கேரள அரசு சிறப்புக்குழு அமைத்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளது. ஏற்கனவே இதற்காக மாநில அரசு பல கோரிக்கைகளையும் முன்வைத்தும் மத்திய அரசு அதற்குச் செவி மடுக்கவில்லை. மேலும், கடந்த 2003-ம் ஆண்டே விமான நிலைய தனியார்மயமாக்கல் குறித்த பேச்சு எடுக்கப்பபட்ட போது, `மாநில அரசுடன் ஆலோசனை கேட்ட பின்பே முடிவு செய்யப்படும் என மத்திய அரசு உறுதிமொழி கொடுத்தது. அந்த உறுதிமொழியை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். தனியார் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் விமான நிலையத்தைக் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிட வேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்

More News >>