பாலியல் வன்கொடுமை.. பின்பு ஆசிட் வீச்சு.. எருமை மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
உத்தரப்பிரதேசத்தின் படோஜி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திங்கள்கிழமை தனது கிராமத்தில் எருமை மாடுகளை ஒட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றுள்ளார். மேய்ச்சலுக்குச் சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன்பின் இளம்பெண்ணைத் தேடிய பெற்றோர்கள் அவரை காணவில்லை என்பதை அறிந்து போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். பெண்ணின் பெற்றோர்கள் சந்தேகப்படும்படியாக கொடுத்த நபர்களின் பெயர்களை வைத்து விசாரணை நடத்தினர். அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே, புதன்கிழமை பிற்பகல் படோஹியின் எல்லையில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தின் ஏரியில் நீரில் மூழ்கி இறந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அது எருமை மேய்க்கும் போது காணாமல் போன இளம்பெண் என்பது உறுதி செய்யப்பட்டது. இளம்பெண் உடலில் தீக்காயங்கள் இருப்பதை அறிந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் முடிவில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளன. இறப்பதற்கு முன் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்களும், ஆசிட் வீச்சுக்கான தடயமும், பின்னர் இளம்பெண் தீ வைத்துக் கொல்லப்பட்டதற்கான தடயங்களும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.