`அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என மாற்றுங்கள்! -ஜெய்ராம் ரமேஷ் காட்டம்
தனியார் ஒத்துழைப்புடன் விமான நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின்படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை நேற்று கூடி ஒப்புதல் அளித்தது. இதேபோல் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் கௌஹாத்தி விமான நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பும் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கியுள்ளது.
முதலாவதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் இத்திட்டத்தை எதிர்த்து காட்டமாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ``மாநில அரசோடு ஆலோசனை செய்யாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது கடினம். இது ஒட்டுமொத்த கேரள மக்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவு. இதனால், இந்த விவகாரத்தில் நீங்கள், நேரடியாகத் தலையிட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்." என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் இரண்டாவது நபராக இத்திட்டத்துக்கு எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளார். அதில், ``முதலில் லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்கள் விற்கப்பட்டன. இப்போது ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களும் விற்கப்பட இருக்கின்றன. எல்லா ஏர்போர்ட்களும் அதானியின் நிறுவனத்துக்கே விற்கப்பட்டுள்ளன. அதனால் இனி `ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா' என்பதற்கு பதிலாக `அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா' என்று மாற்றுங்கள்'' என்று அதிரடியாக கூறியுள்ளார்.