ஸ்ரீசைலம் மின்நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து.. 9 ஊழியர்களின் கதி என்ன..
ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. அங்கிருந்து 10 ஊழியர்கள் உயிர்தப்பி வெளியேறி விட்டனர். மின்நிலையத்திற்குள் சிக்கிய மேலும் 9 பேரை மீட்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் இடது கரையோரம் நீர் மின்நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மின்நிலையத்திற்குள் நேற்றிரவு திடீரென தீப்பற்றியது. தீ பரவுவதற்கு முன்பே புகை மண்டலம் சூழ்ந்ததால், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் வெளியே வர முடியவில்லை.
எனினும், 10 ஊழியர்கள் உயிர்தப்பி வெளியே வந்து விட்டனர். மேலும் 9 ஊழியர்கள், மின்நிலையத்திற்குள் சிக்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கர்னூல் மாவட்டம், அட்மாக்குர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து, அந்த 9 பேரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தெலங்கானா அமைச்சர் ஜெகதீஸ்வர ரெட்டி கூறுகையில், நேற்றிரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 10 பேர் வரை தாங்களாகவே புகை மண்டலத்திற்குள் இருந்து வெளியே தப்பி வந்து விட்டனர்.
மேலும் 9 பேர் உள்ளே சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்காகத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றுவோரை உதவிக்கு அழைத்துள்ளோம். அவர்களுக்குத்தான் இப்படியான தருணத்தில் மீட்புப் பணிகள் குறித்து அனுபவம் இருக்கும் என்று தெரிவித்தார்.