சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை..
சென்னையில் ரவுடி சங்கரை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவர் மீது அயனாவரம் கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட 4 கொலை முயற்சி வழக்குகளும், 4 கொலை வழக்குகளும் உள்ளன. இந்நிலையில், தலைமறைவாக இருந்த சங்கர், நியூஆவடி சாலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் அங்குச் சென்று, சங்கரைச் சுற்றி வளைக்க முயற்சித்தனர். அப்போது, சங்கர் திடீரென அரிவாளால் போலீசாரை தாக்கினான். இதில், முபாரக் என்ற காவலருக்கு வெட்டு விழுந்தது. இதனால், இன்ஸ்பெக்டர் நடராஜன் துப்பாக்கியால் சங்கரைச் சுட்டதில் அவன் சுருண்டு விழுந்து பலியானான்.இதைத் தொடர்ந்து, சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும், காயமடைந்த காவலர் முபாரக், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், வல்ல நாடு பகுதியில் துரை முத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் சுப்பிரமணியன் மீது நாட்டு வெடிகுண்டை துரை முத்து வீசினான். அந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்ததில், இருவருமே உயிரிழந்தனர். இது தொடர்பாக டி.ஜி.பி. திரிபாதியிடம் நிருபர்கள் பேட்டி எடுத்த போது, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர், ஒரு சம்பவத்தை வைத்து அப்படிச் சொல்லக் கூடாது என்று பதிலளித்தார். எனினும், ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காவல் துறை உயர் அதிகாரிகள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், மீண்டும் என்கவுண்டரை ஆரம்பித்துள்ளதாகப் பேசப்படுகிறது.