எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்காக சபரிமலையில் சங்கீத அர்ச்சனை, சிறப்புப் பூஜை

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா உலக பிரபலங்களும் அவர் உடல் நலம் பெற வேண்டி மனமுருகிப் பிரார்த்திக்கின்றனர். இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று காலை எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற வேண்டி கோவில் ஊழியர்கள் சார்பில் சிறப்புச் சங்கீத அர்ச்சனையும், சிறப்புப் பூஜையும் நடத்தப்பட்டது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்களான தவில் வித்வான் சுகுணன், நாதஸ்வர கலைஞர் கணேஷ் மற்றும் கேரளாவின் பிரபல வாத்திய இசைக்கருவியான இடைக்கா இசைக் கலைஞர் கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து கோயில் முன் உள்ள கொடிமரத்தின் அருகே வைத்து இந்த சங்கீத அர்ச்சனையை நடத்தினர். எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான சங்கராபரணம் பாடலையும் இந்த கலைஞர்கள் இசைத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற வேண்டிப் பிரார்த்தித்தனர்.

இதன் பின்னர் கோயிலில் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் நலம் பெற வேண்டிச் சிறப்புப் பூஜையும் நடத்தப்பட்டது. இந்த சிறப்புச் சங்கீத அர்ச்சனை சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் 'ஹரிவராசனம்' என்ற பெயரில் ஒரு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஐயப்பனின் புகழைப் பரப்பும் கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் இந்த விருதைக் கேரள அரசு வழங்கி வருகிறது. 2015ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா, பி சுசீலா, கே.ஜே. ஜேசுதாஸ், பி ஜெயச்சந்திரன் உட்படப் பல இசைக் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

More News >>