பாசக்கார குவி நாயை கேரள போலீஸ் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்க முடிவு
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானவர்கள் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 14வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் ஒரு கர்ப்பிணி உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று 26 வயதான முத்துலட்சுமி மற்றும் 15 வயதான கவுசிகா, சிவரஞ்சனி ஆகியோர் உடல்கள் மீட்கப்பட்டன. முத்துலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 பேரின் உடல்கள் மீட்க வேண்டி உள்ளது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று அங்குள்ள வனப்பகுதியிலும் உடல்களைத் தேடும் பணி நடந்தது. அப்போது திடீரென ஒரு சிறுத்தை அங்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திலேயே அந்த சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலியான 2 வயது சிறுமி தனுஷ்கா உட்படப் பலரது உடல்களை மீட்க உதவிய குவி என்ற நாயைக் கேரள போலீஸ் தனது துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடுக்கி மாவட்ட எஸ்பி கருப்பசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், குவி நாயின் உடல் நிலை குறித்து விரைவில் மருத்துவர்கள் பரிசோதனை நடத்த உள்ளனர். இந்த பரிசோதனை முடிவின்படி 'கே 19' என்ற கேரள போலீசின் துப்பறியும் நாய் பிரிவில் இந்த நாயும் சேர்க்கப்படும் என்றார்.