முரளிதரனின் விரலை உடைக்க சொன்ன சக வீரர்.. ஆனால்?! -சோயப் அக்தர் சொன்ன ரகசியம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பௌலர்களில் ஒருவர் சோயப் அக்தர். இவர் தனது ஓய்வுக்குப் பின் கருத்துக்கள் சொல்வதில் பிசியாக இருக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் தனது விளையாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதில் சில சர்ச்சையாகவும் மாறத் தவறுவதில்லை. இதற்கு முன் இந்திய வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்துப் பல முறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில், ஒரு இன்டர்வியூ ஒன்றில் `உங்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் அவுட்டாக விருப்பம் தெரிவித்தார்களா?' என நெறியாளர் கேட்க, ``நிறையப் பேர் அப்படி என்னிடம் கூறியுள்ளார்கள். இந்திய டெயிலெண்டர்கள் அப்படி என்னிடம் சொல்லியுள்ளனர். `எங்களுக்கு குடும்பம் உள்ளது. எங்களை அடிக்க வேண்டாம்" எனக் கூறி மெதுவாக பந்துவீசச் சொல்லுவர்.
அதேபோல் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், என்னை மெதுவாகப் பந்துவீசச் சொல்லிக் கேட்டுள்ளார். ஒரு முறை இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது எங்கள் அணி வீரர் யூசுப் யோகானா என்னிடம் வந்து, `முரளிதரனின் விரலை உன் பந்துவீச்சால் உடைத்துவிடு. அவரின் சுழல் பந்துவீச்சை என்னால் சமாளிக்க முடியவில்லை' எனக் கேட்டுக்கொண்டார். அதற்கேற்ப நானும் முரளிதரனுக்கு பவுன்சராக வீசினேன். ஆனால், சிறிது நேரத்தில், `உன் வேகமான பந்துவீச்சு என்மீது பட்டால் நான் செத்துவிடுவேன்' என முரளிதரன் என்னிடம் சொன்னார்" என்று அக்தர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.