செப்.11ல் உ.பி. ராஜ்யசபா இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
உத்தரப் பிரதேசத்தில் அமர்சிங் மறைவால் ஏற்பட்ட ராஜ்யசபா காலியிடத்தை நிரப்புவதற்கு செப்.11ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அக்கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தவர் அமர்சிங். அவருக்கு டெல்லியில் எல்லா கட்சித் தலைவர்களிடமும் நெருங்கிய நட்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கினர். எனினும், அவர் முலாயமுடன் நட்பு பாராட்டி வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், சமாஜ்வாடி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நீண்ட காலமாகச் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது மறைவால் ஏற்பட்ட ராஜ்யசபா காலியிடத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இந்த எம்.பி. பதவிக்கு செப்டம்பர் 11ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. உ.பி. சட்டசபையில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளதால், அந்த கட்சிக்கே இந்த எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.