திருமண பரிசால் ரோட்டை அடைத்த போலீஸ்
இந்த கொரோனா காலத்தில் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களைக் கூட மிகவும் ரகசியமாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பேருக்கு அழைப்பிதழ் கொடுத்து, தடபுடலாகத் திருமணத்தை நடத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போது திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடினாலே சிக்கல்தான். எனவே கடந்த சில மாதங்களாகப் பலரும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்களை வரவழைத்து திருமணத்தை நடத்தி வருகின்றனர். இதே போலத் தான் கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள ஆர்ப்புக்கரை பகுதியைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டரான பினு செபஸ்டியனின் பெற்றோரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜூபினா என்ற பெண்ணின் பெற்றோரும் தங்களது பிள்ளைகளின் திருமணத்தைத் தடபுடலாக நடத்தத் தீர்மானித்திருந்தனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்த ஏற்பாடும் செய்திருந்தனர். இதற்காக இரு வீட்டாரும் சேர்ந்து 1500க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்க தீர்மானித்தனர். இந்த சமயத்தில் தான் கொரோனா மூலம் விதி விளையாடியது. திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திருமணத்தை ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்டிலும் அதே நிலை தான் தொடர்ந்தது. இதையடுத்து வேறு வழியில்லாமல் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளின் படி திருமணத்தை நடத்தத் தீர்மானித்தனர். அதன்படி நேற்று கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் மிக எளிமையாகத் திருமணம் நடந்தது. இதில் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொள்ள வரும் யாரும் தங்களுக்குப் பரிசு எதுவும் தர வேண்டாம் என்று மணமக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். ஆனாலும் தங்களது நண்பனுக்குத் திருமண பரிசு கொடுக்காமல் இருக்க பினுவின் நண்பர்களுக்கு மனம் வரவில்லை. வித்தியாசமாக என்ன பரிசு கொடுக்கலாம் என அவர்கள் யோசித்தனர். அப்போது தான் அவர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. கொரோனா பரவல் காரணமாக கோட்டயத்தில் சில இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த இடத்தில் போக்குவரத்தைத் தடை செய்வதற்குத் தடுப்பு வேலிகள் இல்லாமல் போலீசார் அவதிப்பட்டு வந்தனர். இதையறிந்த பினுவின் நண்பர்கள் பினுவுக்கு திருமண பரிசாக ஒரு தடுப்பு வேலியைக் கொடுக்க முடிவு செய்தனர். இதன்படி திருமணத்தன்று மணமக்களுக்கு அந்த தடுப்பு வேலியைப் பரிசாகக் கொடுத்தனர். அந்த வித்தியாசமான திருமண பரிசை பார்த்து திருமணத்திற்கு வந்தவர்களும், மணமக்களும் வியப்படைந்தனர். அதில் மணமக்களுக்கான வாழ்த்து வாசகங்களும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை எழுதப்பட்டிருந்தன. திருமணம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் அந்த தடுப்பு வேலியை ஒரு ஆட்டோவில் ஏற்றி பினுவும், ஜூபினாவும் சேர்ந்து போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த வித்தியாசமான பரிசை பெற்றுக் கொண்ட போலீசார் மணமக்களைப் பாராட்டினர். உடனடியாக போலீசார் அந்த தடுப்பு வேலியைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குச் செல்லும் ரோட்டை அடைத்தனர்.