பாடகியால் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா? பரபரப்பாக பரவும் அதிர்ச்சி தகவல்..
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை அளிப்பதுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் அவர் உடல் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலகினர் ரசிகர்கள் இணைந்து நேற்று கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 2 நாளில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. எஸ்பிபிக்கு கொரோனா தொற்று பாடகி மாளவிகாவால் பரவியது என்று இணைய தளத்தில் தகவல் பரவிவருகிறது. கொரோனா பாதிப்பு இருந்தும் எஸ்பிபி பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாளவிகா பங்கேற்றதால் தான் அவருக்கு கொரோனா பரவியது எனக் கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் மாளவிகா இது குறித்து ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கேற்ற நிகழ்ச்சி படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி நடந்தது. மறுநாள் ஜூலை 31ம் தேதி நடந்த படப்பிடிப்பில் 4 பாடகிகளில் பங்கேற்றனர் அதில் நானும் கலந்து கொண்டேன். எனக்கு கொரோனா இருந்திருந்தால் என்னுடன் இருந்த மற்ற 3 பாடகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும்.என் சகோதரியும் அந்த நிகழ்ச்சியில் பாடியதாக கூறுகிறார்கள். அவர் பாடகி இல்லை. அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் பாடியிருக்க முடியும்? கொரோனா லாக்டவுன் காரணமாகக் கடந்த 5 மாதங்களாக என் வீட்டிற்குப் பணிப் பெண் கூட வருவதில்லை. கடந்த 5 மாதங்களாக நான் வெளியே செல்லவில்லை.
இந்த நிகழ்ச்சிக்காகத் தான் முதல்முறையாக வெளியே சென்றேன். என் காரில் டிரைவருக்கும் எனக்கும் இடையே நேரடி தொடர்பு கொள்ளாமலிருக்கும் அளவுக்குத் தடுப்பு வைத்து எச்சரிக்கையுடன் இருந்தேன். சென்ற ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றோருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை. இதுபோன்ற போலிச் செய்திகளைத் தயவு செய்து பரப்பாதீர்கள். வதந்தி பரப்புவருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்.
இவ்வாறு மாளவிகா விளக்கம் அளித்திருக்கிறார்.