கொரோனா நிபந்தனைகளை மீறி திருமண போட்டோ ஷூட் 3 பெண்கள் உட்பட 17 பேர் மீது வழக்கு

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களும், சுற்றுலாத் தலங்களும் இன்னும் திறக்கப்படவில்லை. திருமணத்தில் கூட 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள கெல்வ் கடற்கரையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு திருமண போட்டோ ஷூட் நடந்தது. அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ள மணமக்களைக் கடற்கரையில் பல போஸ்களில் நிற்கவைத்து போட்டோகிராபர்களும், வீடியோகிராபர்களும் படமெடுத்தனர். பல மணிநேரம் விதவிதமாக போட்டோவும், வீடியோவும் எடுத்த பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர். இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து அக்டோபர் 8ம் தேதி வரை கெல்வ் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த மாவட்டத்திலுள்ள அணைகள், நீர்வீழ்ச்சி உள்படச் சுற்றுலாத் தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடையை மீறி கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் மணமக்கள் குறித்தும், போட்டோ ஷூட் நடத்தியவர்கள் குறித்தும் போலீசுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போட்டோ ஷூட்டில் பங்கேற்ற 3 பெண்கள், போட்டோகிராபர்கள் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More News >>