14 பயணிகளுக்கு கொரோனா ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங்கில் தடை
கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழைக் கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்த 14 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங்கில் இறங்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கு 72 மணி நேரம் முன்பு கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்ல முடியும். ஆனால் தற்போது நோய் உறுதி செய்யப்பட்டுள்ள பயணிகள் கொரோனா பரிசோதனை நடத்தினார்களா என்பது குறித்த விவரங்களை ஹாங்காங் சுகாதாரத்துறை வெளியிடவில்லை. இந்தியா மட்டுமில்லாமல் வங்காள தேசம், இந்தோனேஷியா, கசகிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே ஹாங்காங்குக்கு செல்ல முடியும்.