மன அழுத்தம்.. வடகொரியாவுக்கு நம்பர் 2 தலைவரை நியமித்த கிம் ஜாங்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை தெரியாதவர்கள் யாரும் இருப்பது கடினம். அதிரடி நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். கடந்த சில ஆண்டுகளாக இவர் முன்னின்று நடத்திய அணு ஆயுதச் சோதனையைக் கண்டு உலக நாடுகள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயின. வல்லரசு நாடுகள் முதல் சிற்றரசு நாடுகள் முதல் அனைவரும் அதை நிறுத்த வேண்டும் கூக்குரலிட்டு, அதைச் காதில் வாங்காமல் தொடர்ந்து அணு ஆயுதச் சோதனை, ஏவுகணை சோதனைகளை செய்து மிரட்டி வந்தார்.

இதன்பின் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வழிக்கு வந்தார் கிம். எனினும், மர்ம மற்றும் அதிரடி நடவடிக்கைகளை சற்றும் அவர் குறைக்கவே இல்லை. சில மாதங்களுக்கு முன், கிம் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவரது சகோதரி நாட்டை வழிநடத்துகிறார் என்றும் திடீரென தகவல் வெளியானது. ஆனால் அதற்கு சில நாட்கள் கழித்து பொதுமக்கள் முன் தோன்றினார். அதேபோல் உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்து கிடைக்க ஐந்து மாதங்கள் கழித்து தான் தங்கள் நாட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது என்றார்.

இந்நிலையில், தற்போது கிம் தனது சகோதரி யோ ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கிம்மின் சகோதரி யோ ஜாங்கே ஒட்டுமொத்த அரசு விவகாரங்களை வழிநடத்துகிறார் என்றாலும், கிம் வசமே நாட்டின் முழு அதிகாரம் இருக்கிறது என்றும் அந்த உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. கிம்மின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், பதவியின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும், கொள்கை ரீதியிலான தோல்வி ஏற்பட்டால் குற்றஞ்சாட்டப்படுவதை தவிர்க்கவுமே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.

கிம்மின் சகோதரி யோ அமெரிக்கா மற்றும் தென் கொரியா உடனான வட கொரியாவின் கொள்கை உறவை பராமரிக்கும் பொறுப்பை ஏற்று தற்போதைக்கு வடகொரியாவின் நம்பர் 2 தலைவராக மாறி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

More News >>