தமிழகத்தில் 3 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு.. 6340 பேர் பலி
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை 6340 பேர் பலியாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.21) ஒரே நாளில் 5995 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 32 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 67,430 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று வீடு திரும்பிய 5764 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று 101 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 6340 ஆக உயர்ந்தது. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் 200 பேருக்கு குறையாமலும் தொற்று கண்டறியப்படுகிறது.சென்னையில் நேற்று 1282 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 22,757 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 430 பேருக்கும், காஞ்சிபுரம் 220, திருவள்ளூர் மாவட்டத்தில் 369 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 22,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 21,756 ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று தொற்று கண்டறியப்பட்ட 122 பேருடன் மொத்தம் 11,131 பேருக்கு நோய் பாதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தொற்று கண்டறியப்பட்ட 127 பேருடன் மொத்தம் 10,422 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.மேலும், பல மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.