டிடிவி தினகரனை வழிப்போக்கன் என குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவின் கட்சி கொடியையும், சின்னத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது குறித்து கவலையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக இரு அணிகளாக பிரிந்த பிறகு அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உடன் 18 எம்.எல்.ஏக்கள் உடன் வந்தனர். இதனையடுத்து, கட்சித்தாவல் தடைசட்டத்தின்படி அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இதற்கிடையில், நடந்து முடிந்த கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேட்சையாக வெற்றிபெற்றதை அடுத்து தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக கூறப்பட்டது. மேலும், அதிமுக ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும், தக்க நேரத்தில் அவர்கள் வெளியே வருவார்கள் என்று டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு அபார வெற்றியை பெற்றுத் தந்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் கட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 3 வாரத்திற்குள் கட்சியின் பெயர், சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, தனது கட்சியின் பெயர்களாக 3 பெயர்களை தினகரன் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்.

இதனையடுத்து, டிடிவி தினகரன் வரும் மார்ச் 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, மதுரை மாவட்டம் மேலூரில் நடக்கவுள்ள விழாவில், தனது கட்சியின் கொடி மற்றும் பெயரை டிடிவி தினகரன் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினகரன் கட்சி தொடங்குவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “குற்றப்பின்னணி கொண்டயாரும் அதிமுகவில் கிடையாது. குற்றபின்னணி கொண்டவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக கூறப்படும் கருத்தை மற்ற கட்சிகள் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

டிடிவி தினகரன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அதிமுகவின் கட்சி கொடியையும், சின்னத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது குறித்து கவலையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>