பினராயி விஜயனுக்கு கேரள பூ வியாபாரிகள் கடும் கண்டனம்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா காலமாக இருந்தபோதிலும் கேரளாவில் மட்டும் 'ஓணக் காலம்' தொடங்கிவிட்டது. இன்று முதல் 10 நாட்கள் மலையாளிகள் தங்களது வீடுகள் முன்பு பூக்கோலம் இட்டு மாவேலி மன்னனை வரவேற்க இப்போதே தயாராகி வருகின்றனர். இன்றிலிருந்து 10வது நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்களை பயன்படுத்தினால் அதன் மூலம் பரவ வாய்ப்புண்டு. எனவே வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்களை பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்று கூறினார். பினராயி விஜயனின் இந்த கருத்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையை நம்பித்தான் தமிழ்நாட்டிலுள்ள தோவாளை, ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பூ விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். பினராயி விஜயனின் இந்த அதிரடி கருத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள பூ விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கேரளாவில் உள்ள பூ வியாபாரிகள் பினராயி விஜயனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து கேரளாவை சேர்ந்த சில பூ வியாபாரிகள் கூறியது: தமிழ்நாட்டில் இருந்து தான் காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் உள்பட பெரும்பாலான பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு வரப்படுகிறது. அவை அனைத்தும் எந்த இடையூறும் இல்லாமல் கேரளாவுக்கு வருகிறது. ஆனால் தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூக்களால் மட்டும் கொரோனா பரவ வாய்ப்பு உண்டு என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிமாநிலங்களில் இருந்து பூக்களுடன் வரும் லாரிகள் அனைத்தும் கேரள எல்லையில் கிருமி நாசினி தெளித்த பின்னர் தான் கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அங்கிருந்து வரும் பூக்களால் எந்த காரணம் கொண்டும் கொரோனா பரவ வாய்ப்பில்லை. எனவே முதல்வர் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும். அவரது கருத்தால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். திருமண சீசனுக்கு அடுத்தபடியாக ஓணம் பண்டிகை காலத்தில் தான் எங்களுக்கு நல்ல வியாபாரம் நடைபெறும். தற்போது இதிலும் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.

More News >>