பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் வாலிபரின் தாயும், சகோதரியும் கைது
உலகில் அதிகமாக எங்குமே கேள்விப்படாத ஒரு கொடூர கொலை சம்பவம் கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கு முன் நடந்தது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு சூர்யா என்ற மகளும், சூரஜ் என்ற மகனும் உள்ளனர். சூரஜுக்கும் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த இரு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி 100 பவுன் நகை, ஒரு கார், 50 சென்ட் இடம் உள்பட வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனாலும் அது சூரஜுக்கும் அவரது பெற்றோருக்கும் திருப்தியை தரவில்லை. அடிக்கடி பணம் கேட்டு சூரஜ் உத்ராவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சூரஜ் கேட்கும்போதெல்லாம் உத்ராவின் பெற்றோர் பணம் கொடுத்து வந்துள்ளனர். தாய் ரேணுகா, அக்கா சூர்யாவும் சேர்ந்து தங்கள் பங்குக்கும் உத்ராவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் சூரஜின் வீட்டில் வைத்து உத்ராவை ஒரு விஷ பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் அவர் ஓரளவு உடல் நலம் தேறினார். பின்னர் ஓய்வு எடுப்பதற்காக உத்ரா அஞ்சலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இடையிடையே மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அங்கு செல்வது உண்டு. இந்நிலையில் இரு வாரங்கள் கழித்து படுக்கை அறையில் வைத்து உத்ராவுக்கு பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிதனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அடுத்தடுத்து இரண்டு முறை உத்ராவை பாம்பு கடித்த சம்பவம் அவரது பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ஏசி வசதி செய்யப்பட்ட படுக்கையறையில் எப்படி பாம்பு நுழைந்தது என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து உத்ராவின் பெற்றோர் அஞ்சல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் உலகில் எங்குமே அதிகமாக கேள்விப்படாத ஒரு திடுக்கிடும் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தனது மனைவி உத்தரவை விஷப் பாம்பை வைத்து கடிக்க வைத்து சூரஜே கொலை செய்தது தெரியவந்தது. இதற்காக அடூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ₹10,000 கொடுத்து ஒரு விஷப்பாம்பை வாங்கியுள்ளார். முதலில் தனது வீட்டில் வைத்து பாம்பை கடிக்க வைத்து உத்ராவை கொல்லத் திட்டமிட்டார். ஆனால் அப்போது பாம்பு கடித்த போதிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் குணமடைந்தார்.இதன் பின்னர் மீண்டும் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சம்பவத்திற்கு முந்தைய நாள் மறுபடியும் ₹ 10,000 பணம் கொடுத்து மேலும் ஒரு பாம்பை வாங்கினார். அதை பையில் போட்டு உத்ராவின் வீட்டுக்கு சென்றார். இரவில் தூங்குவதற்கு தூக்க மாத்திரை போடும் பழக்கம் உத்ராவுக்கு இருந்தது. நன்றாக அவர் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப் பாம்பை எடுத்து அவரை கடிக்க வைத்துள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சூரஜையும், அவருக்கு பாம்பு விற்பனை செய்த சுரேஷையும் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த சதித் திட்டத்தில் சூரஜின் தந்தை சுரேந்திரனுக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேந்திரனையும் கைது செய்தனர். இதற்கிடையே சூரஜின் தாய் ரேணுகா மற்றும் அக்கா சூர்யாவுக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டுமென்று மாநில மகளிர் ஆணையம் கேரள போலீசிடம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக மகளிர் ஆணையமும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று சூரஜின் தாய் ரேணுகாவையும், அவரது அக்கா சூர்யாவையும் போலீசார் கைது செய்தனர். உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது.