நித்தியின் கைலாசாவில் டெம்பிள் சிட்டி ஹோட்டல்.. மதுரை தொழிலதிபரின் `அடடே ஆசை!
ஊர், உலகமே கொரோனா பீதியில் உறைந்துகிடக்க சாமியார் நித்யானந்தாவோ தனது சேட்டைகளை கொஞ்சம் கூட குறைக்கவில்லை. கடந்த வாரம் கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிடப் போவதாகவும், ரிசர்வ் வங்கியை அறிவிக்கப் போவதாகவும் கூறியிருந்த நித்தி, இப்போது செய்தும் காட்டியிருக்கிறார்.விநாயகர் சதுர்த்தியான இன்று கால் காசு முதல் பத்து காசு வரையான தங்க நாணயங்கள் வெளியிட்டு அதிரடி காட்டி இருக்கிறார்.இன்று வெளியிட்டுள்ள காணொளியில், உள்நாட்டு புழக்கத்துக்கு என்று ஒரு தனி நாணயமும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு என்று வேறொரு தனி நாணயமும் அறிமுகப்படுத்தி, 'இந்து முதலீட்டு மற்றும் ரிசர்வ் வங்கி' என்று கைலாசாவின் வங்கிக்கு பெயரும் அறிவித்துள்ளார். மேலும் வங்கியின் செயல்பாடுகளை நிர்வகிக்க வேறு ஒரு நாட்டுடன் தனது நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குறும்புக்கார நித்யானந்தாவுக்கே குறும்பாக ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் மதுரை தொழிலதிபர் ஒருவர். மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரபலமான மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார்தான் அந்த குறும்பான கோரிக்கையை வைத்த தொழிலதிபர்.
அவரின் கோரிக்கையோ கைலாச நாட்டில் தனது டெம்பிள் சிட்டி ஹோட்டலின் கிளையை நிறுவுவதற்கு நித்யானந்தா அனுமதி தரவேண்டும் என்பதுதான். ``நித்யானந்தாவைப் போன்று தங்கள் ஹோட்டலும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே இந்தக் கோரிக்கையை நேரடியாக நித்தியானந்தாவிடம் தெரிவிக்க முடியாத காரணத்தால் நாணய வெளியீடு உள்ளிட்ட அறிவிப்புகளை செய்திகள் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். அதே போல தன் கோரிக்கையும் செய்தி மூலம் நித்யானந்தா நாளை காலை அறிந்து கொள்வார்" என்று குமார் குறிப்பிட்டுள்ளார். பக்தனின் குறும்பு ஆசைக்கு நித்தி செவிசாய்ப்பாரா?