12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்
குழந்தைகளை கொரோனா அதிகமாகப் பாதிக்காது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அது தவறு என்று தற்போது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதியவர்களைப் போலவே குழந்தைகளையும் இந்நோய் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 12 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவுரைகள்.....நோய் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளிலும், 1 மீட்டர் அகலத்தை கடைப்பிடிக்க முடியாத இடங்களிலும் 12 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். முதியவர்களுக்கு எப்படி கொரோனா பரவ வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறதோ அதேபோல குழந்தைகளுக்கும் நோய் பரவ வாய்ப்பு இருப்பதால் 6க்கும் 11 வயதுக்கும் இடையே உள்ள குழந்தைகள் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து முகக் கவசம் அணிய வேண்டும். இந்த வயதுடைய குழந்தைகள் முதியவர்களுடன் பழக அதிக வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக முகக் கவசம் அணிவிக்க வேண்டும்.
சாதாரண சூழ்நிலைகளில் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவையில்லை. உலக சுகாதார அமைப்பும், யுனிசெப் அமைப்பும் இணைந்து குழந்தைகளுக்கான இந்த அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுவரை உலகில் 2.3 கோடி மக்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதற்கும் அதிகமான நோயாளிகள் இருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நோய் அறிகுறி இல்லாத நோயாளிகள் அதிக அளவில் இருப்பது தான் இதற்குக் காரணமாகும்.