மூணாறு நிலச்சரிவு.... மீட்புப்பணிகளை தொடர்வதா, வேண்டாமா? இன்று முக்கிய முடிவு
மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 7ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 82 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இவர்களில் பலர் காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மறுநாள் முதல் மீட்புப் பணிகள் தொடங்கின. இதில் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 70 பேரைத் தேடும் பணி கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை 65 உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. இன்னும் 5 பேரைக் காணவில்லை. கடைசி நபரைக் கண்டுபிடிக்கும் வரை மீட்புப் பணி தொடரும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்த தேடுதல் வேட்டையில் எந்த உடல்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து மீட்புப் பணியைத் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க இன்று மூணாறில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. காணாமல் போனவர்களின் உறவினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அவர்களிடம் ஆலோசித்த பின்னர் மீட்புப் பணியை மேலும் தொடர்வதா அல்லது நிறுத்தி வைப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கிடையே இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது