தமிழக கேரள வனப்பகுதியில் மீண்டும் வாயில் காயத்துடன் சுற்றும் யானை
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் பழங்களில் சக்தி வாய்ந்த வெடி பொருளை வனப்பகுதியில் வைக்கின்றனர். வெடி இருப்பது தெரியாமல் இதைச் சாப்பிடும் விலங்குகள் வெடி வெடித்து பரிதாபமாக இறக்கின்றன. இதே போலத் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடி பொருள் வைக்கப்பட்டிருந்த அன்னாசிப் பழத்தைச் சாப்பிட்ட யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு சில நாட்களிலேயே அந்த யானை பரிதாபமாக இறந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு காட்டு யானை வாயில் பலத்த காயத்துடன் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாலக்காடு வனப் பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது. கடந்த 16ம் தேதி தமிழக வனப்பகுதியில் வைத்துத்தான் இந்த யானையைத் தமிழக வனத்துறை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதன் பின்னர் இந்த யானை கேரள எல்லைக்குள் நுழைந்து அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளைத் தாக்கி சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து அப்பகுதியினர் பாலக்காடு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மண்ணார்க்காடு வனத்துறை அதிகாரி சுனில் குமார் தலைமையில் வனத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வனப் பகுதிக்குள் சென்றனர்.
பின்னர் அந்த யானையைக் கண்டுபிடித்து மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். தொடர்ந்து யானையின் வாயில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அந்த யானையின் நாக்கிலும் பலத்த காயம் இருந்தது. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்றது. யானைக்குச் சிகிச்சை அளித்த போதிலும் அதன் உடல்நிலை திருப்திகரமாக இல்லை என்று அதற்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறினர். கேரளாவில் அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் வனத்துறைக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.