நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார் - ஷமிக்கு ஆதரவளிக்கும் தோனி
எனக்கு தெரிந்தவரை முகமது ஷமி மிகவும் பண்பானவர் என்றும் அவர் மனைவி மற்றும் நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார் என்றும் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், தனது முகநூல் பக்கத்தில் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாக கூறி, அந்தரங்க விஷயங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் சாட் விவரங்களை கசியவிட்டார்.
மேலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஹசின் ஜகான் அளித்துள்ள பேட்டியில், ஷமியின் இந்த கீழ்த்தரமான போக்கை தட்டிக் கேட்டதற்காக குடும்பத்தினர்களுடன் இணைந்து ஷமி தன்னை துன்புறுத்துவதாகவும், கொலை முயற்சி கூட நடந்ததாகவும் கூறினார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த முஹமது ஷமி, எனது புகழை கெடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், எனது திறமையை சீர்குலைக்கும் முயற்சியில் விரோதிகள் களமிறங்கியுள்ளனர் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலிஷபா என்ற பெண்ணிடம் பலமுறை பணம் வாங்கியுள்ளார். ஆனால் இந்த பணம் குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் பதில் கூறாமல் மழுப்பி விடுகிறார் என ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கூறியிருந்தார்.
மேலும், “மனைவியான என்னை ஏமாற்றும் போது நாட்டை ஏன் ஏமாற்றி இருக்க மாட்டார். இந்த பணம் சூதாட்டத்துக்காக (மேட்ச் பிக்சிங்) கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். துபாய் ஹோட்டலில் ஷமி பணம் வாங்கியதற்காக ஆதாரம் என்னிடம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மனைவியின் புகாரால் பிரச்சனை ஆளாகியிருக்கும் முகமது ஷமிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி ஆதரவளித்துள்ளார்.
இது குறித்து தோனி கூறுகையில், “இது ஷமியின் குடும்ப விஷயம். எனக்கு தெரிந்தவரை முகமது ஷமி மிகவும் பண்பானவர். அவர் மனைவி மற்றும் நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். அவரது குடும்ப விஷயத்தில் இதற்கு மேல் நான் எதுவும் கூறக்கூடாது” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com