வீடுகளில் புகுந்து பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற ஹரியானா ஐஜி கைது

ஹரியானா மாநில போலீசில் ஊர்க்காவல் படை ஐஜியாக இருப்பவர் ஹேமந்த் கல்சன் (55). நேற்று இரவு இவர் குடிபோதையில் அப்பகுதிகளில் உள்ள சில வீடுகளில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பெண்களை மானபங்கப்படுத்த முயன்றுள்ளார். இதில் வீட்டில் இருந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால் அவர் தனது துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடுவதாக மிரட்டி பீதியை ஏற்படுத்தினார்.

அப்பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒரு பெண்ணின் வீட்டில் தான் முதலில் ஐஜி ஹேமந்த் நுழைந்தார். அவரையும், அவரது மகளையும் தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றார். மிகவும் சிரமப்பட்டு இருவரும் சேர்ந்து ஐஜியை வீட்டை விட்டு வெளியே தள்ளினர். அதன் பின்னர் அடுத்த வீட்டுக்குள் புகுந்த அந்த ஐஜி அங்கிருந்த பெண்ணையும் பலாத்காரம் செய்ய முயன்றார். இது குறித்து அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்குத் திரண்டனர். ஆனால் அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் பலரும் அவரை நெருங்கப் பயந்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மிகவும் சிரமப்பட்டு ஐஜி ஹேமந்தை அங்கிருந்து கொண்டு சென்றனர். இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த புகாரின் பேரில் ஐஜி ஹேமந்த் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்த போதிலும் அடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>