சோனியா பதவி விலகலா? காங்கிரஸ் செயற்குழு பரபரப்பு..

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று(ஆக.24) நடைபெறுகிறது. இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகியதாக வந்த தகவலால், இந்த கூட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு(2019) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்கக் கடந்தாண்டு மே 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அப்போது, தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தி, தலைவராக நீடிக்கக் கூறினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.

இதனால், மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகச் சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதன்பிறகு, இது வரை முழு நேரத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவரே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அதுவே கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்துக் கட்சி என்று விமர்சித்து வருகின்றனர். அதனால், தான் மீண்டும் தலைவராக விரும்பவில்லை என்றும் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரே தலைவராக வர வேண்டும் என்றும் ராகுல்காந்தி வெளிப்படையாகக் கூறியிருந்தார். அதை அப்படியே பிரியங்கா காந்தியும் ஆதரித்து பேட்டி அளித்திருந்தார்.இந்த சூழ்நிலையில், சமீப காலமாகக் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும், சோனியா பதவி விலகி கட்சிக்கு புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று சிலரும் கூறி வந்தனர்.

மேலும், கபில்சிபல், குலாம்நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 103 முக்கிய தலைவர்கள் இணைந்து சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில், கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் முழு அளவில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் கெலாட் உள்ளிட்டோர், தற்போதைய சூழ்நிலையில் சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டுமென்றும், அது தான் கட்சிக்கு நல்லது என்றும் கூறியுள்ளனர்.இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு இன்று கூடுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் உள்படப் பலரும் பங்கேற்கிறார்கள். இதில் சோனியா காந்தி தனது முடிவை அறிவிக்க உள்ளார். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் இல்லாமல் ஒரு புதிய தலைவரை ஒருமித்த கருத்துடன் கொண்டு வர இந்த கூட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. எனவே, இந்த கூட்டத்தைக் காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்த்துள்ளனர்.

More News >>