பீகாரில் நிதிஷ்குமாரே மீண்டும் முதல்வர்.. ஜே.பி.நட்டா அறிவிப்பு..

பீகார் மாநில தேர்தலில் நிதிஷ்குமாரே மீண்டும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர்-நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கியஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த இரு கட்சிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக உரசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த முறை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பாஜகவைச் சேர்ந்தவரை அறிவிக்க வேண்டுமென அக்கட்சியில் கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில், பீகார் மாநில பாஜக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவர் விவாதித்தார். அப்போது அவர் கூறியதாவது:பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது. இந்த கூட்டணி, வரும் தேர்தலிலும் அமோக வெற்றி பெறும். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில்தான் தேர்தலைச் சந்திப்போம். பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும். மீண்டும் அவர்தான் முதல்வராக வருவார். இதில் சந்தேகம் தேவையில்லை.

எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான தொலைநோக்கு பார்வையும் இல்லை. மக்களுக்குச் சேவையாற்றும் கொள்கை எதுவும் கிடையாது. அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறார்கள். பீகாரில் நிதிஷ்குமார் அரசின் சிறந்த செயல்பாடுகளால், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 73.48 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகளை மாநில அரசு செய்திருக்கிறது. வீடு வீடாகச் சென்று மக்களின் உடல்நிலையைச் சோதித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

More News >>