அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி.. டிரம்ப் அறிவிப்பு..

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 56 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய்த் தொற்று பாதித்துள்ளது. ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நோய்க்கு இது வரை சரியான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ரஷ்யா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை நூறு சதவீதம் சோதனை செய்யப்படவில்லை. எனினும், இந்தியா உள்பட சில நாடுகளில் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது. இதன்படி, கொரோனா நோயிலிருந்து முழுமையாகக் குணம் அடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு, அவை கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்தப்படும். அதன்மூலம், நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து நோய் குணமாகும்.

அமெரிக்காவிலும் இந்த பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை அடிப்படையில் பலருக்குச் செய்யப்பட்டு வந்தது. தற்போது பிளாஸ்மா சிகிச்சைக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்து அந்நாட்டு அரசு அவசர உத்தரவு பிறப்பித்திருக்கிறது.இது குறித்து, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று பேட்டியில் தெரிவித்தார். அவர் கூறுகையில், சீன வைரஸ் நோயால் அமெரிக்காவில் பலர் உயிரிழந்த நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அனுமதி அளித்து, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இது போன்ற விஷயங்களில் அரசு அனுமதி பெற நீண்ட நாளாகும். ஆனால், இப்போது மிகவும் வேகமாக நாம் இணைந்து செயல்பட்டு, இந்த அனுமதியை அளித்திருக்கிறோம். வெகுவிரைவில் தடுப்பு மருந்து பற்றிய அறிவிப்பையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

More News >>