கேரள அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதம் தொடங்கியது

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியுடன் கேரள முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கூறி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்தில் நடத்தி வரும் கார் ஒர்க் ஒர்க் ஷாப்பை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தான் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 6 மாதங்களுக்கு முன் நடந்த இந்த கார் ஒர்க் ஷாப் திறப்பு விழா வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கேரள அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனைப் பதவி விலகக் கோரும் தீர்மானத்தையும் கொண்டுவர எதிர்க்கட்சியினர் திட்டமிட்டனர். இது தொடர்பாகச் சட்டசபை செயலாளரிடம் எதிர்க்கட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானம் 14 நாட்களுக்கு முன் கொடுக்கப்பட்டால் தான் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறி அப்போதே அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சட்டசபை கூட்டம் தொடங்கியது. முதலில் சமீபத்தில் மரணமடைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்பின்னர் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நிதி மசோதா நிறைவேறியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னி தலா பேசினார். அப்போது, தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் 14 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று கூறி அது நிராகரிக்கப்பட்டது. எனவே சபை கூட்டத்தொடரை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்து இந்த தீர்மானம் தொடர்பாக விவாதிக்க வேண்டும்.

நமது நாட்டுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிய ஒரு குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்ததின் மூலம் சபாநாயகர் தனது பதவியைக் களங்கப்படுத்தி விட்டார் என்று அவர் கூறினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், உங்களின் கோரிக்கை நியாயமானது தான். ஆனால் 14 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்காமல் சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது. இது சட்டமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை என்னால் மாற்ற முடியாது என்றார். இதன்பின்னர் கேரள அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் கொண்டு வந்தார். தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினர். முன்னதாக சபைக்கு வந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆன்டிஜன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவருக்கும் சானிடைசர், முகக் கவசம் மற்றும் ஷீல்டுகள் வழங்கப்பட்டன. சபைக்குள் சமூக அகலத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் சிறிது இடைவெளிவிட்டு உறுப்பினர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. பார்வையாளர்கள் யாரும் சபைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து சபையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

More News >>