மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகள் நாளை முதல் மீண்டும் தொடரும்
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த 7ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பல்வேறு சிரமங்களைத் தாண்டி தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது கடும் முயற்சியால் தான் 65 உடல்கள் மீட்கப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகே ஓடும் ஆற்றிலும், ஆற்றின் கரையில் இருந்தும் பல உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 5 பேரைக் காணவில்லை. கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடந்த தேடுதல் வேட்டையில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து நேற்றும், இன்றும் தற்காலிகமாக மீட்புப் பணியை நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்களைத் தொடர்ந்து தேடுவதா, வேண்டாமா என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மூணாறில் நடந்தது. கடந்த இரு தினங்களில் உடல்கள் எதுவும் கிடைக்காததால் தான் மீட்புப் பணியைத் தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கத் தீர்மானிக்கப்பட்டது. தேவிகுளம் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இடுக்கி மாவட்ட கலெக்டர் சதீசன், இடுக்கி எம் பி டீன் குரியாக்கோஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிலச்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் நடத்திய ஆலோசனையில் நாளை முதல் மீண்டும் மீட்புப் பணிகளைத் தொடர தீர்மானிக்கப்பட்டது. நிலச்சரிவு நடந்த இடத்தில் மட்டுமல்லாமல் அப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப் பகுதியிலும் தேட முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வனப்பகுதியில் மீட்புப் படையினர் சென்றபோது ஒரு சிறுத்தை வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்த நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.