வயலில் இறங்கி நாற்று நடும் நடிகை அனுமோல்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுமோல். மலையாளத்தில் இவர், 'இவன் மேகரூபன்', 'அகம்', 'வெடி வழிபாடு', 'காட் ஃபார் சேல்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'கண்ணுக்குள்ளே', 'சூரன்', 'திலகர்', 'ஒருநாள் இரவில்', 'ராமர்' உள்படப் பல படங்களில் நடித்துள்ளார். பாலக்காடு அருகே உள்ள ஒற்றப்பாலம் என்ற பகுதி தான் அனுமோலின் சொந்த ஊர் ஆகும். இவரது குடும்பத்திற்குச் சொந்தமாகப் பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஓய்வு கிடைக்கும் நாட்களில் அனுமோல் தனது நிலத்தில் இறங்கி விவசாயப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வயலில் இறங்கி விதை விதைப்பது, நாற்று நடுவது உட்பட பணிகளில் ஈடுபட்டார். மேலும் தனது விவசாயப் பணிகள் குறித்த ஒரு வீடியோவையும் தன்னுடைய பேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வரலாகப் பரவி வருகிறது. அவரது இந்த முயற்சிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விவசாயத்தை விரும்பாத இளைய தலைமுறையினருக்கு நடிகை அனுமோலின் இந்த செயல் மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று பலரும் சமூகத் தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.